×

பீஸ்ட் : விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெள்ளித்திரையில் வெளியாகியிருக்கிறது. சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ், விஜய் இணைந்துள்ள படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரா உளவுத்துறையில் பணியாற்றிவிட்டு தனது வேலையை விட்டு விலகியவர் விஜய். விடிவி கணேஷ் நடத்தும் கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். அங்கேயே பணிபுரியும் பூஜா ஹெக்டே, விஜய்யை காதலிக்கிறார். ஒரு நாள் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு வேலை விஷயமாக விடிவி கணேஷுடன் விஜய், பூஜா ஹெக்டே செல்கின்றனர். அப்போது மாலில் நடக்கும் சில விஷயங்கள் விஜய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அங்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அவர் கணிக்கிறார். அதேபோல், அங்கு சன்டா கிளாஸ் வேடமிட்டு திரிந்துகொண்டிருக்கும் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியை எடுத்து மக்களை நோக்கி சுடுகின்றனர். ஷாப்பிங் மாலை ஹைஜேக் செய்துவிடுகிறார்கள். அப்போது விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் ஒரு அறையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஷாப்பிங்கிற்கு வந்த மக்கள் ஹாஸ்டேஜாக தீவிரவாதிகள் முன் மண்டியிடுகிறார்கள். இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் சிறையில் உள்ள தங்களின் தலைவனை விடுதலை செய்ய வேண்டும் என தீவிரவாதிகள் டிமாண்ட் வைக்கின்றனர். அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரியான செல்வராகவனுக்கு மாலுக்குள் விஜய் இருப்பது தெரிகிறது. விஜய்யின் உதவியை நாடுகிறார். அதற்கு பிறகு இந்த கடத்தல் விவகாரம் என்ன ஆகிறது, விஜய் தீவிரவாதிகளுடன் மோதி ஜெயித்தாரா, ஹாஸ்டேஜ்களின் கதி என்ன என்பதையெல்லாம் பரபரப்பான திரில்லருடன் திரைக்கதை மூலம் சொல்கிறது பீஸ்ட்.முழுக்க முழுக்க விஜய்யின் ஒன்மேன் ஷோ படத்தை பல மடங்கு தூக்கி நிறுத்துகிறது. அவரது முதல் சண்டை காட்சியே அசத்தல் ரகம். விடிவி கணேஷ் அலுவகத்தில் புகுந்து அவர் செய்யும் கலாட்டாக்கள் கலகலப்பு விதம். நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும் என செல்வராகவனுக்கு திருப்பி கேட்கும் விஜய், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மனம் மாறும்போது, ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும்போது அப்ளாஸ் அள்ளுகிறார். தீவிரவாதிகளை பழி தீர்க்க அவர் போடும் ஸ்கெட்ச்கள் பரபரப்பு ரகம். சைக்கிள் கேப்பில் அவ்வப்போது பூஜா ஹெக்டேவுடன் ரொமான்சும் செய்து காதல் ஏரியாவை களைகட்ட வைக்கிறார். குழந்தையை பிடித்துக்கொண்டு கொல்ல முயலும் தீவிரவாதியின் தலையை மட்டும் துண்டாக வெட்டி வெளியே வீசும்போது அனல் பறக்கும் விஜய் ஆகிறார். மொத்தத்தில் படத்தில் தரப்பட்ட எல்லாவித ஏரியாவிலும் நின்று நடிப்பில் கில்லி ஆடியிருக்கிறார் விஜய். அவரது ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியிலும் ரசிகர்களின் விசில் சத்தமும் கைதட்டலும் தியேட்டர்களை அதிர வைக்கிறது.பூஜா ஹெக்டே அழகு தேவதையாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். விஜய்யுடன் மாலில் இருக்கும் இன்னொரு பெண்ணை இணைத்து அவர் சந்தேகிக்கும்போது, கோபத்திலும் அழகை வெளிப்படுத்துகிறார். யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி அண்ட் டீம், சிரிப்புக்கு கியாரன்டி எடுத்துக்கொள்கிறது. இதனால் இவர்கள் வரும் காட்சியில் எல்லாம் சிரிப்பலை அதிர வைக்கிறது. அதிலும் குறிப்பாக விடிவி கணேஷ் அடிக்கும் கமென்ட்டுகள் எல்லாம் குபீர் ரகம். இயக்குனர் செல்வராகவனை நடிகராக முதல்முறையாக பார்க்கிறோம். கேமரா படபடப்பு இல்லாமல் நடிப்பிலும் தான் ஒரு டைரக்டர் என்பதை நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். மந்திரியாக வரும் ஷாஜி சென், தனது கேரக்டரை திறம்பட செய்திருக்கிறார்.அரபிக்குத்து பாடல் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. படத்திலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று டான்ஸ் ஆடி, ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள். அதேபோல் ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அனிருத் பின்னி பெடலெடுத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கதையின் போக்ைக விட்டு விலகாமல் திறம்பட செயல்பட்டிருக்கிறது. நிர்மலின் எடிட்டிங் ஷார்ப். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களையடுத்து பீஸ்ட் மூலம் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட், குடும்பத்துடன் காண வேண்டிய கோலாகலமான ஆக்‌ஷன் திருவிழா….

The post பீஸ்ட் : விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Sun Pictures ,Vijay ,Sarkar ,Sun ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...